லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்:
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
நாகூர் யானைகட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
3 பேர் கைது
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், நாகூர் மியான் தெருவை சேர்ந்த அசன் இப்ராஹிம் (வயது57), நாகூர் ஒத்தகாமள தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மதன்ராஜ் (24), நாகை எடுத்துக்கார தெருவை சேர்ந்த முகமது அலி (48) என்பதும், இவர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசன் இப்ராஹிம், மதன்ராஜ், முகமது அலி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.