ஆடு மேய்த்த முதியவரை தாக்கிய 3 பேர் கைது

ஆடு மேய்த்த முதியவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-17 18:50 GMT

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள முள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர் (வயது 63). ஆடு வளர்த்துவரும் இவரது மனைவி பூரணம் (56). இவர்களது எதிர் வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (55). இந்நிலையில் பூரணத்திற்கும், பழனியம்மாவுக்கும் இட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சம்பவத்தன்று பழனியம்மாள், பூரணம் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனியம்மாளின் உறவினர்களான மாத்தூர் தென்னம்பிள்ளையை சேர்ந்த மூர்த்தி மகன் பார்த்திபன் (25), பெரியசாமி மகன் பால்சாமி (19), இலுப்பூர் தாலுகா, தென்னலூர் குணசேகரன் மகன் ராமலிங்கம் (26), கீரனூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேரும் தகராறு குறித்து கேட்பதற்காக முள்ளிப்பட்டியில் உள்ள பூரணம் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். அப்போது அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் முள்ளிப்பட்டி அருகே மண்டையூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் பூரணத்தின் கணவர் அழகர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தகவல் அறிந்து அங்கு சென்றனர். பின்னர் அவரிடம் ஏன் உனது மனைவி பூரணம் எங்களது உறவினரான பழனியம்மாளை அடித்தார் என்று கேட்டவாறு அழகரை 4 பேரும் சேர்ந்து கட்டையால் அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அழகரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவரை தாக்கிய பார்த்திபன், பால்சாமி, ராமலிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்