திருத்தணி அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
திருத்தணி அருகே பெண்ணை தாக்கிய மூவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மதுரை (வயது 45). இவருடைய மனைவி அமுலு (38). இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமுலுவின் கணவர் மதுரை வெளியூர் சென்றிருந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு சரவணன் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்களான பாலன், மோகன் குமார், சஞ்சய்குமார் ஆகியோர் கத்தி, கோடாளி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அமுலுவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அமுலுவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து அமுலு திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி அமுலுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாலன், மோகன் குமார், சஞ்சய்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சரவணனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.