ஊத்தங்கரை
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டுசரோஜ்குமார் தாக்கூர், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஆந்திர, கர்நாடக மாநில எல்லைகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊத்தங்கரை போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது புதுக்கடையை சேர்ந்த பச்சப்பன் (வயது60), கல்லாவி மலையம்மாள் (66) ஆகிய 2 பேரும் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனை
ஊத்தங்கரை போலீசார் நல்லாகவுண்டனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதேபகுதியை சேர்ந்த மணி (24) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்து இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.