பொத்தனூரில்மின் மோட்டார் ஒயர்களை திருடிய 3 பேர் கைது

Update: 2023-07-18 18:42 GMT

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட காக்கா தோப்பில் பெண்கள் சுகாதார வளாகம், எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆண்கள் சுகாதார வளாகம் மற்றும் காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் உள்ள மின் மோட்டார் ஒயர்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டதாக பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் (வயது 56) வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் மின் மோட்டார் ஒயர்களை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் இந்திராணி பொத்தனூர் சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொத்தனூர் பொத்தக்காரன் தோட்டத்தை சேர்ந்த ரமேஷ் மகன்கள் ராமன் (19), லட்சுமணன் (19) மற்றும் வேலூர், திருவள்ளூர் சாலையை சேர்ந்த முத்துசாமி மகன் கோகுல் (19) ஆகியோர் என்பது தெரியவந்ததது. அதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 அடி நீளமுள்ள மின் மோட்டார் ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்