பெண் குழந்தையை விற்ற வழக்கில் வக்கீல் உள்பட மேலும் 3 பேர் கைது

லால்குடி அருகே பெண் குழந்தையை விற்ற வழக்கில் வக்கீ்ல் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-07 19:28 GMT

லால்குடி அருகே பெண் குழந்தையை விற்ற வழக்கில் வக்கீ்ல் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வக்கீல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). இதேபோல் லால்குடி அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (42). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி (38). பிரபுவின் அலுவலகம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருேக உள்ளது. இந்த அலுவலகத்துக்கு ஜானகி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன் மூலம் ஜானகிக்கும், பிரபுவுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜானகி திருமணமாகாமலேயே முறையற்ற உறவால் கர்ப்பம் ஆனார்.

கருவை கலைக்க...

7 மாத கர்ப்பிணியாக இருந்த ஜானகி, கருவை கலைக்க வக்கீல் பிரபு மற்றும் அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை அணுகினார். இதனையடுத்து அவர்கள் குழந்தை பிறந்ததும், அதனை விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, குழந்தையை பிரபுவிடம் ஒப்படைத்தார். பிரபு குழந்தையை லால்குடி அருகே உள்ள மணக்கால் சூசையாபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (35) என்பவர் மூலம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஒருவரிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரபு குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு மட்டுமே விற்பனை செய்ததாகவும், அதில் தான் ரூ.20 ஆயிரத்தை எடுத்து கொண்டதாக தெரிவித்து, ஜானகியிடம் ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

போலீசில் புகார்

பணத்தை பெற்றுக் கொண்ட ஜானகி நகைகளை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்கிடையில் குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பிரபு, சண்முகவள்ளி ஆகியோர் விற்றது ஜானகிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி குழந்தையை விற்ற தகவலை போலீசிடம் தெரிவிக்காமல் குழந்தையை பிரபுவிடம் கொடுத்ததாகவும், அதன்பின் காணாமல் போய்விட்டதாகவும், எனவே குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரியும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். இது தொடர்பாக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் புகார் கொடுத்த ஜானகி மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஜானகியின் விருப்பத்தின் பேரில் குழந்தையை பிரபு, அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் சேர்ந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. மேலும் ஜானகி குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது.

மேலும் 3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகியை கைது செய்தனர். இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக வக்கீல் பிரபு, அவரது 2-வது மனைவி சண்முகவள்ளி மற்றும் ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விற்கப்பட்ட குழந்தை யாரிடம் உள்ளது, குழந்தை விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்