வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிய மேலும் 3 சிறுவர்கள் சென்னையில் சிக்கினர்
வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 6 பேரில் ஒரு சிறுவன் பிடிப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் சென்னையில் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
6 சிறுவர்கள் தப்பியோட்டம்
வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி 6 சிறுவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த 3 காவலர்களை தாக்கி விட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பியோடினார்கள்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் தப்பியோடிய சிறுவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தப்பியோடியவர்கள் சென்னை, திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அங்கு சென்றிருக்கலாம் என்று தனிப்படை போலீசார் அந்த மாவட்டங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் 3 பேர் சிக்கினர்
இந்த நிலையில் ஒரு சிறுவனை கடந்த 31-ந் தேதி சென்னையில் வைத்து தனிப்படை போலீசார் பிடித்து, வேலூருக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் அரசு பாதுகாப்பு இல்லத்தில் அடைத்தனர்.
மற்ற 5 பேரையும் தனிப்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய ஒரு சிறுவனை சென்னை கோயம்பேடு போலீசார் நேற்று முன்தினம் இரவு திருட்டு வழக்கில் கைது செய்தனர்.
கோயம்பேடு போலீசார் சிறுவனை சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று காலை வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். இதேபோன்று அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய மேலும் 2 சிறுவர்களை சென்னை மணலி போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் நேற்று கைது செய்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மணலி போலீசார் கைது செய்துள்ள 2 பேரில் ஒருவன் 18 வயது நிரம்பியவன். மற்றொருவன் 17 வயதுக்கு உட்பட்டவன். எனவே 18 வயது பூர்த்தியான நபரை சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றொரு சிறுவன் சென்னை கெல்லீஸ் சிறார் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட உள்ளான்.
பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 6 பேரில் 4 பேர் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் சிக்கி உள்ளனர். கடலூர் விருத்தாச்சலத்தை சேர்ந்த சிறுவன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த சிறுவனை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் 2 பேரும் சிக்குவார்கள் என்றனர்.