கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேர் கைது

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேர் கைது

Update: 2022-12-07 18:45 GMT


கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காருக்குள் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.

இது தொடர்பாக முதலில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அவர்கள் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தி அங்கு இருந்த 75 கிலோ வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

6 பேர் கைது

மேலும் இது தொடர்பாக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் (28), மற்றும் முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) பாய்ந்தது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதுடன், சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பவர்கள் குறித்த தகவலும் சேகரித்து வந்தனர்.

என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

அவர்கள், இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 6 பேரையும் சென்னைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உயிரிழந்த ஜமேஷா முபின் வீடு, சம்பவம் நடந்த இடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தீவிர கண்காணிப்பு

இந்த வழக்கில் கைதான 6 பேரின் வீடுகள் மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் செல்போன், மடிக்கணினி உள்பட சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யார்? இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 6 பேரின் நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த வர்கள், சந்தேக நபர்கள் உள்பட பலரின் செல்போன், இணையதளம் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.

மேலும் 3 பேர் கைது

இதற்கிடையே கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் (25), பெரோஸ்கான் (28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான உமர் பாரூக் (39) ஆகிய 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முகமது தவுபீக், பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகிய 3 பேரும் ஜமேஷா முபினுக்கு உதவியாக இருந்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்பு குறித்து விசாரணை

கைதான 3 பேரும் கார் வெடிப்பு வழக்கில் உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு எந்த வகையில் துணையாக இருந்தனர்?, இந்த வழக்கில் 3 பேரின் பங்களிப்பு என்ன?, அவர்கள் செய்த உதவி என்ன? எந்த அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. தரப்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விரைவில் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் அனுமதி பெற்று 3 பேரிடமும் விசாரிக்க உள்ளனர்.

இந்த கைது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உறுதிமொழி

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்ததில் உயிரிழந்த ஜமேஷா முபின் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து, தற்கொலை படை தாக்குதல் நடத்த உறுதிமொழி எடுத்து உள்ளார்.

அவர் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் சின்னங்கள், நினைவு சின்னங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குன்னூரில் சதித்திட்ட கூட்டம்

கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஜமேஷா முபின் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ள பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகியோர் குன்னூரில் உள்ள உமர் பாரூக் வீட்டில் சந்தித்து சதி திட்டம் தீட்ட கூட்டம் நடத்தி உள்ளனர். அத்துடன் இந்த 2 பேரும் ஜமேஷா முபின் செய்யும் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து உள்ளனர்.

அதுபோன்று முகமது தவ்பீக் மதவாதம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை வைத்து இருந்ததுடன், வெடிபொருட்கள் தயாரிப்பது குறித்த குறிப்புகளையும் வைத்து இருந்தார். தற்போது அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்