கார் டிரைவர் கொலையில் மேலும் 3 பேர் கைது

கும்பகோணம் கார் டிரைவர் கொலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-02 20:48 GMT

கும்பகோணம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் தினேஷ் என்கிற தினகரன் (வயது 28). கார் டிரைவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாண்டி, பத்மநாதபுரம் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்தி என்கிற ஹல்க் (21), மேலக்காவேரி செக்கடிதெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயகுமார் என்ற கிரி (22) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலக்காவேரியை சேர்ந்த கர்ணன் மகன் மணிகண்டனை (25) போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், தினகரனின் உறவினர்கள் நேற்று முன்தினம் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி முன்பு ஒன்று திரண்டு இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.

மேலும் 3 பேர் கைது
இந்தநிலையில், தினகரன் கொலை வழக்கில் தொடர்புடைய சுவாமிமலை சின்னக்கடை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சிபிராஜ் (19), செட்டிமண்டபம் பாக்யலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தருண் (19), கும்பகோணம் மேலக்காவேரி கீழத் தெருவை சேர்ந்த பாலகுரு மகன் சந்தோஷ் குமார் (23) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேர் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட 3 பேர் என 6 பேரையும் கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் 6 பேரையும் சிறையில் அடைத்தனர்.



மாநில


Tags:    

மேலும் செய்திகள்