நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் 3 பேர் கைது

நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் 3 பேர் கைது

Update: 2023-04-18 18:45 GMT

கோவை

பாளையங்கோட்டை சிறையில் கைதி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எதற்காக கோவை வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோந்து பணி

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று முன்தினம் ரெயில்நிலையம் அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ரெயில் நிலையம் முன் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களுக்கு முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த மாடசாமி (வயது 27), சுபாஷ் (25), பசும்பொன் (27) என்பது தெரியவந்தது.

சிறை கைதி கொலை

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பாளையங்கோட்டை சிறையில் கடந்த 2021-ம் ஆண்டு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த நெல்லை மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த முத்துமனோ (28) என்பவர் சிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் கைதான 3 பேரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது. கூலிப்படையை சேர்ந்த இவர்கள் எதற்காக கோவை வந்தனர்?, கோவையில் யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டனரா? அல்லது வேறு காரணங்களுக்காக கோவை வந்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்