மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

Update: 2023-10-16 21:37 GMT

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் பட்டரகரணை அடுத்துள்ள நெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 35). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (30). இவர்களுக்கு 1¼ வயதில் ஆண் குழந்தை இருந்தது.

தனசேகரன், தன்னுடைய மனைவி, குழந்தையுடன் வாரம்தோறும் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சென்னை கொசப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

பவித்ரா, கொசப்பேட்டையில் வாரம் ஒரு முறை புடவை, சுடிதார், நைட்டி போன்ற பெண்களுக்கு தேவையான ஆடைகளை வியாபாரம் செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை கொசப்பேட்டைக்கு தனசேகரன் மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கார் மோதி 3 பேரும் பலி

பின்னர் நேற்று மதியம் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திருப்பி கொண்டு இருந்தார். கோவளம் பஸ் நிலையம் அருகே மாமல்லபுரம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அதே திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தனசேகரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த தனசேகரன், அவருைடய மனைவி பவித்ரா, 1¼ வயது குழந்தை ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சே்ந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவர்கள் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்