காலியாக உள்ள 3½ லட்சம் அரசு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காலியாக உள்ள 3½ லட்சம் அரசு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-09-02 18:53 GMT

சென்னை,

தமிழக அரசுத் துறைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைக்க அரசு ஆணையிட்டிருக்கிறது.

தமிழகத்தில் அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், இது பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும். காலியாகும் நிரந்தர பணியிடங்களை தமிழக அரசு நிரப்புவதே இல்லை என்பதால் தான், காலியிடங்கள் 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன.

பா.ம.க. வலியுறுத்தல்

நிரந்தர பணியிடங்களை நிரப்பாவிட்டால், தற்காலிக பணியிடங்கள் 25 ஆண்டுகள் ஆனாலும் நீடிக்கத்தான் செய்யும். இதை உணராமல், 10 ஆண்டுகளுக்கு மேலும் தற்காலிக பணியிடங்கள் தொடருவது ஏன்? என்று ஆராய்வதில் பயனில்லை.

தமிழக அரசு துறைகளில் 3½ லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

ஆட்குறைப்பு நடவடிக்கை

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. அதற்கு காரணம், காலியிடங்களை அரசு நிரப்பாதது தான். காலியிடங்களை நிரப்பாமல் வைத்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காலியிடங்களை ரத்து செய்ய துடிப்பது அப்பட்டமான ஆட்குறைப்பு நடவடிக்கை தான்.

இதன் முடிவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். இது மிகப்பெரிய சமூக அநீதி.

தி.மு.க.தேர்தல் அறிக்கை

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள 3½ லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்றுவரை அரசுத்துறைகளில் ஒரு பணியிடம்கூட புதிதாக உருவாக்கப்படவில்லை. அதேபோல், கடந்த 15 மாதங்களில் நிரப்பப்பட்ட அரசுப் பணி காலியிடங்களைவிட, புதிதாக உருவாக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

அரசு நடவடிக்கை

இத்தகைய சூழலில் காலியாக உள்ள 3½ லட்சம் பணியிடங்களை ஒழிக்க நினைப்பது நியாயமல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3½ லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்