ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

மன்னார்குடியில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2022-12-18 18:45 GMT

மன்னார்குடி:

மன்னார்குடியில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ரகசிய தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு ரசகிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா மற்றும் போலீசார் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சலூன் கடையில் சோதனை

அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடி மன்னை நகர் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் சலூன் கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட 17 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சலூன் கடை உரிமையாளர் மகேஷ்வரன் (வயது 35) என்பவதை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், மன்னார்குடியை சேர்ந்த ஹாஜாமைதீன் (46) என்பவர் கொகுசு காரில் புகையிலை பொருட்களை கொண்டு வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

இதையடுத்து மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசுகாரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் அந்த காரில் 167 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்வரன், ஹாஜாமைதீன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 184 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்