3 லட்சத்து 95 ஆயிரம் மகளிர் விண்ணப்பம்

ிருவாரூா் மாவட்டத்தில் உரிமை தொகை பெற இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரத்து 684 பேர் விண்ணப்பித்துள்ளதாக கணிப்பாய்வு அலுவலர் நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-22 18:45 GMT

திருவாரூா் மாவட்டத்தில் உரிமை தொகை பெற இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரத்து 684 பேர் விண்ணப்பித்துள்ளதாக கணிப்பாய்வு அலுவலர் நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமாக 771 நியாய விலை கடைகள் உள்ளன. அதில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 748 குடும்ப அட்டைகள் உள்ளன.

இதுவரை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிம தொகை பெற 3 லட்சத்து 95 ஆயிரத்து 684 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்திட சிறப்பு முகாம்கள் 2 கட்டங்களாக நடக்கிறது.

சிறப்பு முகாம்

முதல் கட்டமாக நாளை(திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. 2-ம் கட்டமாக அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம் அந்தந்த ரேஷன்கடைகளில் நடக்கிறது. ரேஷன் கடை பணியாளர்கள் முகாம் நடக்கும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வழங்குவார்.

முகாம் நடக்கும் 4 நாட்களுக்கு முன்பு டோக்கன் வழங்கப்படும். விண்ணப்பம் பெற யாரும் ரேஷன் கடைக்கு வரதேவையில்லை. குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக இருந்ததால் அந்த குடும்பத்தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

கட்டுப்பாட்டு அறை

குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவரின் மனைவியின் பெயர் இல்லாத பட்சத்தில், குடும்பத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். திருமணமாகாமல் தனியாக வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

முன்னதாக அவர், திருவாரூர் தாலுகா அகரதிருநல்லூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்ட விண்ணப்பபடிவம் வழங்குவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்டவருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனாமணி (மன்னார்குடி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உள்பட அரசு அலுவலர்கள், அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்