தூத்துக்குடி அருகே தீயில் கருகி 3 வீடுகள் சேதம்
தூத்துக்குடி அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் நாசமாகின.
ஸ்பிக்நகர்:
முள்ளக்காடு கக்கன்ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இசக்கியம்மாள், ஜான்சிராணி, ஜெனிட்டா ஆகியோர் உறவினருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் சென்று இருந்தனர். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென்று அவர்களுடைய வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தெர்மல் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று வீடுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவிடாமல் அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன.