3 விடுதிகளுக்கு 'சீல்'
ஊட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட 3 விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் விதிமுறைகள் அமலில் உள்ளது. அதன்படி, வீட்டிற்கு என அனுமதி பெற்று விட்டு வணிக கட்டிடமாக மாற்றக்கூடாது. 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை போன்ற விதிமுறைகள் உள்ளன. இந்தநிலையில் வீடு கட்ட அனுமதி பெற்று விட்டு தங்கும் விடுதிகளாக மாற்றி பயன்படுத்தி வருவதாக புகார் வந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் ஊட்டியில் ஆய்வு செய்தனர். இதில் சவுத் வீக் பகுதியில் 3 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறையினர் உரிமம் பெறாமல் அனுமதியின்றி செயல்பட்ட 3 விடுதிகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டியில் அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகளை நடத்தக்கூடாது என்றும், இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.