ஆண்டிப்பட்டி குடோனில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல்; அரசு ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம்
ஆண்டிப்பட்டி குடோனில் இருந்து ரேஷன் அரிசி கடத்தியதற்கு உடந்தையாக இருந்த, அரசு ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி குடோனில் இருந்து ரேஷன் அரிசி கடத்தியதற்கு உடந்தையாக இருந்த, அரசு ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், வைகை அணை சாலையில் கடந்த 30-ந்தேதி உத்தமபாளையம் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஒச்சு என்பதும், ஆண்டிப்பட்டியில் உள்ள உணவுப்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஒச்சுவை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணி இடைநீக்கம்
இந்தநிலையில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஆண்டிப்பட்டியில் உள்ள குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அங்கு பணியாற்றும் இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வம், பட்டியல் எழுத்தர்கள் சதாசிவம், சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி கடத்தலுக்கு அவர்கள் 3 பேரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்செல்வம் உள்பட 3 பேரை பணி இடைநீக்கம் செய்து மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.