மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் சாவு

கந்திலி அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் இறந்தன. அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2023-02-16 18:34 GMT

மர்ம விலங்கு கடித்து  ஆடுகள் சாவு

திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி பழனி வட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாயி. இவர் நிலத்தின் அருகே கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை தனது விவசாய நிலத்தில் 3 ஆடுகளை மேய விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது, 3 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக வனப்பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஆடுகளை வேட்டையாடி வருகிறது. தற்போது பகல் நேரங்களிலேயே உலா வரத்தொடங்கியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

அதிநவீன கேமரா

இதுகுறித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் கேட்டபோது சம்பந்தப்பட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இல்லை. ஆடுகள் இறந்த பகுதியில் ஆய்வு செய்த போது அதில் நாய்களின் கால் தடம் மட்டுமே பதிவாகியுள்ளது. இருப்பினும் ஆடுகளை வேட்டையாடிய விலங்கை கண்டறிய வனச்சரக அலுவலர் பிரபு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் துல்லியமாக பதிவு செய்யும் அதி நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை. வெறி நாய்கள் ஆட்டை கடித்து இருக்கலாம். தற்போது பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா மூலம் விரைவில் ஆட்டை கடிக்கும் மர்ம விலங்கை கண்டுபிடிக்கலாம் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்