சென்னை மாதவரத்தில் 3 பேத்திகளுடன் பெண் சாவு; நச்சுப்புகை காரணமா? போலீஸ் விசாரணை

சென்னை மாதவரத்தில் பூட்டிய வீட்டுக்குள் 3 பேத்திகளுடன் பெண் பரிதாபமாக இறந்தார். நச்சுப்புகையால் அவர்கள் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-08-20 00:26 GMT

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலை 79-வது தெருவை சேர்ந்தவர் உடையார் (வயது 40). இவருடைய மனைவி செல்வி (32). இவர்களுக்கு சந்தியா (10), பிரியா லட்சுமி (8) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.செல்வியின் அண்ணன் பூதத்தான், இவர்களது எதிர் வீட்டில் குடியிருந்து வருகிறார். அவருடைய மனைவி வேலம்மாள். இவர்களுடைய மூத்த மகள் பவித்ரா (7).

உடையார், தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். செல்போனில் உணவு கேட்டு ஆர்டர் கொடுப்பவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் உணவு வினியோகிக்க சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மனைவி செல்வி, ஆஸ்பத்திரியில் தங்கி அவரை கவனித்து வருகிறார்.

4 பேர் சாவு

இதனால் உடையாரின் தாயார் சந்தான லட்சுமி (65), 2 குழந்தைகளையும் கவனிப்பதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த ஆம்பூர் கிராமத்தில் இருந்து மாத்தூர் வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு சந்தானலட்சுமி, அவருடைய பேத்திகளான சந்தியா, பிரியா லட்சுமி மற்றும் பவித்ரா ஆகிய 4 பேரும் வீட்டில் ஒரே அறையில் மெத்தையில் படுத்து தூங்கினர்.

நேற்று காலை 6.30 மணியளவில் வேலம்மாள், தனது மகள் பவித்ரா வீட்டுக்கு வரவில்லையே என நினைத்து உடையார் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். எந்த பதிலும் வரவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்தது. வீட்டின் உள்ளே ஒரே புகை மண்டலமாக இருந்தது. குழந்தைகளின் தோல் கருப்பாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் வீ்ட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பூட்டிய வீட்டுக்குள் சந்தானலட்சுமி மற்றும் அவருடைய பேத்திகள் 3 பேர் என 4 பேரும் பரிதாபமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காயில் எரிந்து தீ

இதுபற்றி தகவல் அறிந்ததும் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான மாதவரம் பால்பண்ணை போலீசார் விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுக்கு பிறகு தடவியல் நிபுணர்கள் கூறியதாவது:-

வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 சிறுமிகளும், மூதாட்டியும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். அவர்கள் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது மின்விசிறியில் உள்ள காயில் எரிந்து வயரில் தீப்பிடித்துள்ளது. அந்த வயரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, கொசுவை விரட்ட மின்பிளக்கில் பொருத்தப்பட்டு இருந்த லிக்விட் எந்திரத்திலும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

நச்சுப்புகையால் மூச்சுத்திணறல்

அப்போது லிக்விட் எந்திரத்தில் இருந்த பாட்டில் வெடித்து சிதறியது. அதில் இருந்த அமிலமும் அறை முழுவதும் பரவியது. தீப்பிழம்பு அங்கிருந்த அட்டைப்பெட்டியில் விழுந்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் நச்சுப்புகை பரவியது. இந்த புகையால் 4 பேரும் மூச்சுத்திணறி பலியாகி உள்ளனர்.கொசுவிரட்டும் எந்திரத்தில் இருந்து அமிலம் சிதறியதால் அதுவும் தீப்பிடித்து நச்சுப்புகையாக மாறி உள்ளது. அறையை பூட்டிக்கொண்டு 4 பேரும் தூங்கியதால் அந்த புகை வெளியே போகாமல் அறைக்குள்ளேயே இருந்தது. இதனால் அவர்கள் 4 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எனினும் இந்த பொருட்கள் அனைத்தும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை வந்தபிறகு உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பலியான பவித்ராவின் தாத்தா ராமசாமி கூறியதாவது:-

குழந்தைகளை எழுப்பவில்லை

எனது சம்பந்தி சந்தான லட்சுமி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இருந்து வந்து தங்கி இருந்தார். எனது மாப்பிள்ளைக்கு விபத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதால், குழந்தைகளோடு அவர் வீட்டில் இருந்தார். நான் தென்காசிக்கு போய்விட்டு காலையில்தான் வீட்டுக்கு திரும்பி வந்தேன்.

குழந்தைகளை ஏன் இன்னும் எழுப்பவில்லை என எனது மருமகளிடம் கேட்டேன். இப்போது அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று சென்றார். ஆனால் திரும்பி வந்து குழந்தைகள் பிணமாக கிடப்பதாக என்னிடம் சொன்னார். புகை மூட்டத்தில் சிக்கி 4 பேரும் முச்சுத்திணறி இறந்ததாக தெரியவந்தது.

இவ்வாறு அவர் கண்கலங்க கூறினார்.

உயிர் தப்ப போராட்டம்

4 பேரும் மெத்தையில் படுத்து இருந்தபோது புகை மூட்டத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். அதில் ஒரு குழந்தை உடல் சமையல் அறையில் கிடந்தது. எனவே புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது அந்த குழந்தை உயிர் தப்பிக்க போராடி உள்ளது. ஆனால் புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் சமையல் அறையில் மயங்கி விழுந்து பலியாகி இருப்பது தெரிந்தது.

தீ விபத்தில் தனது 2 மகள்களையும் பறிகொடுத்த செல்வி, குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதது, கண்போரை கண்கலங்க செய்தது. விபத்தில் சிக்கி கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்க, 2 குழந்தைகளும் பலியான அதிர்ச்சியில் அவரால் பேசக்கூட முடியவில்லை.

குடும்பத்தினர் சோகம்

ஒரே குடும்பத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு பெண் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் இன்றி அந்த பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது.இறந்துபோன குழந்தைகள் மாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இதில் சந்தியா 5-ம் வகுப்பும், பிரியா, பவித்ரா இருவரும் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் உடையார் தனது மனைவியின் அண்ணன் வீட்டுக்கு எதிரில் வந்து குடியேறினார். வந்த சிறிது நாட்களிலேயே இந்த சோகம் நிகழ்ந்துவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்