கடலூரில் கல்லூரியில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கடலூரில் கல்லூரியில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை, வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மாலை நேர கல்லூரியும் இயங்கி வருகிறது. இதில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் 3 பேரிடம், அங்கு பணிபுரியும் உதவி பேராசிரியர் ஒருவர் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்றும் அந்த உதவி பேராசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த மாணவிகள், தங்களுடன் கல்லூரியில் படிக்கும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 2 பேரிடம் கூறி கதறி அழுதனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள், சக மாணவர்களுடன் சேர்ந்து, வகுப்பறைக்குள் புகுந்து அந்த உதவி பேராசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பணி நீக்கம்
இதற்கிடையே மாணவிகளிடம், உதவி பேராசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டது பற்றி அறிந்த கல்லூரி நிர்வாகம், அவரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த உதவி பேராசிரியர் தன்னை தாக்கிய மாணவர்களை அடிப்பதற்காக கூலிப்படையை ஏவியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள், மாணவர்களை தாக்க கல்லூரிக்கு வர இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று, அந்த 2 மாணவர்களையும் பாதுகாப்பாக கல்லூரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட உதவி பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.