காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி

Update: 2022-10-06 16:12 GMT


திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட காவலாளி மற்றும் 11 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

குழந்தைகள் காப்பகம்

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் என்ற பெயரில் ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை செந்தில்நாதன் (வயது 65) என்பவர் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியிருந்து அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். பெற்றோரை இழந்தவர்கள், தந்தை அல்லது தாய் இழந்த சிறுவர்கள் இங்கு தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காப்பகத்தில் 15 மாணவர்கள் இருந்தனர். நேற்று அதிகாலை காப்பகத்தில் தங்கி இருந்த சிறுவர்களுக்கு திடீர் வயிறுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

3 சிறுவர்கள் சாவு

இந்தநிலையில் காப்பகத்தில் பெற்றோரை இழந்த திருப்பூரை சேர்ந்த பாபு (13), தந்தையை இழந்த திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த ஆதீஷ் (8) ஆகிய 2 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காப்பகத்தில் இருந்த உணவு சமைப்பாளர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவர்களை அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

அப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாதேஸ் (15) என்ற சிறுவனும் பரிதாபமாக இறந்தான். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் காப்பகத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசார் காப்பகத்தின் முன் குவிக்கப்பட்டனர். மற்ற சிறுவர்களை உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களின் விவரம் வருமாறு:-

1.கவுதம் (17). சென்னையை சேர்ந்த இவர் இணையதளம் மூலமாக ஆடிட்டர் படிப்பு படித்து வருகிறார். 2.மணிகண்டன் (15), அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். 3.பிரகாஷ் (11), 4. திருப்பூர் மாவட்டம் வௌ்ளகோவிலை சேர்ந்த தர்ணீஷ் (11). இவர்கள் இருவரும் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். 5. திருப்பூர் பொங்கலூரை சேர்ந்த ரித்திஷ் (7), 3-ம் வகுப்பும், 6.கவின்குமார் (13) 8-வது வகுப்பும், 7.திருப்பூர் சின்னாண்டிபாளையத்தை சேர்ந்த ஹர்ஷத் (8), 4-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

8.ஸ்ரீகாந்த் (12), 8-ம் வகுப்பும், 9. திருப்பூரை சேர்ந்த குணா (9) 3-ம் வகுப்பும், 10.சதீஷ் (8), 4-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். 11. நெல்லையை சேர்ந்த சபரி (9) 5-ம் வகுப்பு படித்து வருகிறான். மேலும் காப்பகத்தின் காவலாளியான கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயராமன் (63) என்பவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் இருந்தவர்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் பார்வையிட்டு சிறுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

கெட்டுப்போன உணவு

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். சிகிச்சையில் உள்ள சிறுவர்கள் கூறும்போது 'கடந்த 4-ந் தேதி இரவு சுண்டல், புளிசாதம், லட்டு சாப்பிட்டோம். நேற்று முன்தினம் காலையில் இட்லி, பொங்கல் வழங்கப்பட்டது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் மதியம் ரசம் சாதம் வழங்கப்பட்டது. இதை எங்களால் சாப்பிட முடியவில்லை. 2 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். இரவிலும் ரசம் சாதம் வைத்திருந்தார்கள். பின்னர் அதிகாலையில் எங்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. அதன்பிறகே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்' என்று தெரிவித்தனர்.

அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போனதால் இந்த வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவ குழுவினர் சிறுவர்களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளை சேகரித்து எதனால் இந்த வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

வாக்குவாதத்தால் பரபரப்பு

அதுபோல் சம்பந்தப்பட்ட காப்பகத்தில் உணவுப்பொருட்கள் மாதிரிகளையும் பகுப்பாய்வுக்கு அதிகாரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். வெளிநபர்கள் மூலமாக காப்பகத்துக்கு இனிப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. அந்த இனிப்பு வகைகள் ஏதேனும் கெட்டுப்போய் இருந்ததா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுஒருபுறம் இருக்க, காப்பகத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் காப்பகத்தின் முன் நேற்று காலை ஏராளமானவர்கள் குவிய தொடங்கினார்கள். இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர் அங்கு திரண்டனர். இந்தநிலையில் தலித் விடுதலை கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காப்பகத்தின் முன் திரண்டு, சிறுவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதை அரசியல் ஆக்கக்கூடாது என்று அங்கிருந்த இந்து அமைப்பினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார், உரிய விசாரணை நடந்து வருவதாக கூறி அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தால் திருப்பூரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்