தரிசு நிலங்களை மேம்படுத்த ரூ.3¾ கோடியில் திட்டப்பணிகள்

வேலூர் மாவட்டத்தில் 2 நிதியாண்டுகளில் ரூ.3 கோடியே 70 லட்சத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-26 16:32 GMT

இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக...

தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களும் 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பினை அதிகரித்தல், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல், உழவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் பாசன பரப்பு இல்லாத இடங்களில் நீர் ஆதாரத்தை உருவாக்குதல், பண்ணை குட்டைகளை அமைத்தல், சிறுபாசன குளங்கள், ஊரணிகள், வரத்துகால்வாய்களை தூர்வாரி மேம்படுத்துதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ரூ.3.70 கோடியில் திட்டப்பணிகள்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் 317 சிறிய கிராமங்களை உள்ளடக்கிய 43 கிராம ஊராட்சிகளில் 390.26 ஏக்கர் பரப்பளவில் 22 தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 293 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

2022-23-ம் ஆண்டில் 271 சிறு கிராமங்களை உள்ளடக்கிய 57 கிராம ஊராட்சிகளில் 293.10 ஏக்கர் பரப்பளவில் 20 தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 230 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3 துறைகளின் சார்பில் ரூ.95 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நிதியாண்டுகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்த ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்