ஆன்லைன் விளையாட்டு மூலம் தொழிலாளியின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.3¾ கோடி மாயம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆன்லைன் விளையாட்டு மூலம் தொழிலாளியின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.3¾ கோடி மாயமாகிவிட்டது. இது தொடர்பாக ராணுவவீரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்தவர் கூத்தான் மகன் செல்வம்(வயது 30). தொழிலாளியான இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை வைத்துள்ளார்.
இவரும், அதே ஊரைச் சேர்ந்த கல்வராயன் மகன் ராணுவ வீரரான ராஜதுரை(29) என்பவரும் நண்பர்கள்.
ராஜதுரை, ஆன்லைனில் கேம் விளையாடினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று செல்வத்திடம் கூறியுள்ளார். மேலும் அவர், செல்வத்தின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கு எண்ணை வாங்கினார். பின்னர் செல்போனில் விளையாட்டு செயலியை பதிவிறக்கம் செய்து விளையாடியுள்ளார்.
பணம் மாயம்
இதன் மூலம் செல்வத்தின் வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக மொத்தம் ரூ.3 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 607 வந்துள்ளது. பின்னர் சில நாட்களில் அந்த பணம் மாயமாகிவிட்டது. இது குறித்து செல்வம், சித்தலிங்கமடம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளையில் புகார் செய்தார். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து செல்வம், திருவெண்ணெய்நல்லூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜதுரை மீது திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சைபர் கிரைம் போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.