ஆன்லைனில் ரூ.3 கோடியே 67 லட்சம் அபேஸ்

வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் 42 பேரிடம் ஆன்லைனில் ரூ.3 கோடியே 67 லட்சத்தை மர்மநபர்கள் அபேஸ் செய்துள்ளார் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

Update: 2022-12-31 18:05 GMT

வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் 42 பேரிடம் ஆன்லைனில் ரூ.3 கோடியே 67 லட்சத்தை மர்மநபர்கள் அபேஸ் செய்துள்ளார் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

114 பேர் மீது குண்டாஸ்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று கடந்தாண்டு காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு குற்ற சம்பவங்களை தடுக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனால் குற்றவழக்குகள் குறைந்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு 275 வழக்குகள் பதிவான நிலையில் கடந்தாண்டு 227 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

கடந்தாண்டு 24 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில், ரவுடிகளுக்கு இடையே தகராறு, முன்பகை காரணமாக எந்த கொலையும் கிடையாது. குடும்ப தகராறு, முறையற்ற உறவு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான கொலைகள் நடந்துள்ளன.

போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகள் அதிகரித்துள்ளன. 2021-ம் ஆண்டில் 49 போக்சோ வழக்குகளும், 8 எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளும் பதிவாகி இருந்தன.

ஆனால் கடந்தாண்டு 66 போக்சோ மற்றும் 24 எஸ்.சி., எஸ்.டி. வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு 114 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதில் 28 பேர் கஞ்சா கடத்திய, விற்ற நபர்கள் ஆவர்.

331 கிலோ கஞ்சா பறிமுதல்

மாவட்டத்தில் காணாமல் போன 466 நபர்களில் 392 பேரை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து உள்ளோம். மணல் கடத்தல் தொடர்பாக 308 வழக்குகள் பதிந்து 317 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளோம்.

அவர்கள் பயன்படுத்திய 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 44,804 லிட்டர் சாராயம், 2,08,000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை விரைவில் ஏலம் விடப்பட உள்ளன.

12,789 கிலோ குட்கா மற்றும் அவற்றை கடத்துவதற்கு பயன்படுத்திய 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 66 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.33 லட்சம் மதிப்பிலான 331 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 27 பேரின் வங்கிக்கணக்குகளை முடக்கி உள்ளோம்.

22,505 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

பல்வேறு குற்றவழக்குகளில் திருட்டு, கொள்ளை, காணாமல் போன ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பிலான பொருட்களில் ரூ.1,71,27,000 மதிப்பிலான பொருட்களை மீட்டு உள்ளோம். இது 75 சதவீதமாகும்.

கடந்தாண்டு போக்குவரத்து விதிமீறியதாக 3,22,012 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.4 கோடியே 7 லட்சத்து 17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போக்குவரத்து விதியைமீறிய 22,505 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மலைக்கிராமங்களில் உரிமம் பெறாமல் பயன்படுத்திய 12 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.3 கோடியே 67 லட்சத்து 42 ஆயிரத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர். அதில், ரூ.70 லட்சத்து 90 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் பணத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. லாட்டரி விற்றது தொடர்பாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூதாட்டம் தொடர்பாக 63 வழக்குகளில் 193 பேர் கைதாகி உள்ளனர். 2021-ம் ஆண்டு கடன் பிரச்சினை, உடல்நலக்குறைவு, குடும்ப தகராறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 257 பேர் தற்கொலை செய்தனர்.

கடந்தாண்டு 274 பேர் தற்கொலை செய்துள்ளனர். முகம் காணும் செயலி மூலம் 75 குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் 1,300 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள், மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லுதல், அதிக வேகமாக செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதியை மீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

மாவட்ட எல்லைகளான 6 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 52 இடங்களில் வாகன தணிக்கை, ரோந்து பணி மேற்கொள்ளப்படும்.

தேவாலயங்கள், கோவில்கள், கோட்டை, பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விதியை மீறும் நட்சத்திர ஓட்டல்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், பாஸ்கர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்