கொலையுண்ட ரவுடி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள்
கோவை ஆவாரம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில், கொலையுண்ட ரவுடி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கோவை,
கோவை ஆவாரம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில், கொலையுண்ட ரவுடி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ரவுடி கொலை
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது32). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார்.
சத்திய பாண்டி கோவை விளாங்குறிச்சியில் தங்கி இருந்து அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் மீது இந்து முன்னணி பிரமுகர் பிஜூவை கொன்றது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. மதுரையிலும் குற்றவழக்குகள் உள்ளன.
இவர் நேற்று முன்தினம் இரவு பாப்பநாயக்கன் பாளையம் கருப்பக்கால் தோட்டம் பகுதியில் உள்ள இளநீர் கடையில் இளநீர் குடித்து விட்டு, அங்கிருந்தவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் சத்திய பாண்டியை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. துப்பாக்கியாலும் சுட்டது. இதில் சத்திய பாண்டி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சத்தியபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
உடலை துளைத்த 3 குண்டுகள்
சத்தியபாண்டி உயிரிழந்து கிடந்த வீட்டின் அருகே வசிப்பவர்கள், வீட்டிற்குள் இருந்து 3 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், ஆகவே அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று இருக்கலாம் என்று கூறி இருந்தனர்.
இந்தநிலையில் சத்திய பாண்டியின் உடல் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்தது தெரியவந்தது. இடது பக்க மார்பு, இடது பக்க வயிறு, வலது பக்க முதுகு ஆகிய 3 இடங்களில் குண்டு பாய்ந்திருந்தது. இதனால் அவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக துணை கமிஷனர் சந்தீஷ் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
தனிப்படையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். அதில் 6 பேரின் முகம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு கோவை காந்திபுரத்தில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சத்திய பாண்டி கைதாகி சிறை சென்றுள்ளார்.தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர் கூலிப்படை கும்பல் தலைவன் போல் செயல்பட்டுள்ளார். நில தகராறு, இடங்களை காலி செய்வது உள்ளிட்ட பிரச்சினைகளில் கூலிப்படையாக வலம் வந்துள்ளார். எனவே முன்விரோதம் காரணமாக இவரை கொன்று இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
10 பேரை பிடித்து விசாரணை
இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.