3 உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை
விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் 3 உண்டில்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
விக்கிரவாண்டி
வரதராஜபெருமாள் கோவில்
விக்கிரவாண்டி மெயின்ரோடு கடைவீதியில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பணிபுரியும் மாலோலன் பட்டாச்சாரியார் தினந்தோறும் கோவில் நடையை திறந்த பூஜை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பெருந்தேவி தாயார் திருமஞ்சன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் மலோலன் பட்டாச்சாரியார் இரவு 8.40 மணிக்கு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். .
பூட்டு உடைந்து கிடந்தது
பின்னர் நேற்று காலை 6 மணிக்கு பூஜைக்காக கோவில் முன்புறம் உள்ள ராஜகோபுர கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவிலின் பிரதான வாசல் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைந்து கீழே கிடந்தது.
மேலும் உள்ளே இருந்த 3 அன்னதான உண்டியல்களை யாரோ மர்மநபர்கள் கடப்பாறையால் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
பின்னர் இது குறித்து பட்டாச்சாரியார் கோவில் நிர்வாக குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிர்வாக குழுவினர் கோவிலுக்கு விரைந்து வந்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், தடயவியல் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து உண்டியல் உடைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு தடயங்களையும் சேகரித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
விசாரணையில் உண்டியலில் இருந்த பணம் சுமார் ரூ.40 ஆயிரம் மற்றும் 8 கிலோ பழைய செப்பு கலசங்கள் காணாமல் போய் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணம் மற்றும் செப்பு கலசங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நகரின் மைய பகுதியில் உள்ள கோவிலில் நடந்த இ்ந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.