3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த தொழிலாளி கைது
நெல்லையில் மதுபானம் வாங்குவதற்காக 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து திருட முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் மதுபானம் வாங்குவதற்காக 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து திருட முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. சில ஏ.டி.எம். மையங்களில் மட்டுமே காவலாளிகள் பணிபுரிகின்றனர். பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகள் இல்லை.
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நடந்து சென்ற மர்மநபர் திடீரென்று அங்குள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். பின்னர் அவர், ஏ.டி.எம். எந்திரத்தின் முகப்புத்திரை கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தார்.
போலீசார் விசாரணை
தொடர்ந்து அவர், அருகில் உள்ள பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதிக்கு சென்றார். அங்குள்ள 2 ஏ.டி.எம். மையங்களுக்குள் புகுந்த அவர் கம்பாலும், கல்லாலும் ஏ.டி.எம். எந்திரங்களின் முகப்புத்திரை கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து சேதப்படுத்திய நபரை பிடித்து விசாரித்தனர்.
மதுபானம் வாங்க திருட முயற்சி
விசாரணையில், அவர் நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முத்து (வயது 50) என்பதும், மதுபோதையில் இருந்த அவர் மேலும் மதுபானம் வாங்குவதற்காக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் மதுபானம் வாங்க ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து தொழிலாளி திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.