வங்கி ஊழியர் வீட்டில் வெடிகுண்டு வீசிய 3 பேர் கைது

வங்கி ஊழியர் வீட்டில் வெடிகுண்டு வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-09 23:13 GMT

சோமரசம்பேட்டை:

வெடிகுண்டு வீச்சு

சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் பாலாஜி கார்டன் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜா(வயது 50). இவருக்கு ராஜலட்சுமி, பவானி என 2 மகளும், சிவக்குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் ராஜலட்சுமி தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 3 பேர், சரோஜாவின் வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீசினர். அந்த வெடிகுண்டு வீட்டின் சுவற்றில் பட்டு விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அது வெடிக்காததால் வீட்டில் இருந்தவர்கள் தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

நண்பர்கள்

விசாரணையில், சிவகுமாரும், லால்குடி தெற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்த தீனா என்ற தினேஷ்(26), பீமாநகர் பங்காளி தெருவை சேர்ந்த ஹரிஹரன்(23), லால்குடி ஆங்கரை காந்தி காலனியை சேர்ந்த கார்த்திக் என்ற ஜாக்கி(25) ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில் தினேஷ், ஹரிஹரன், கார்த்திக் ஆகிய 3 பேரும் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு தினேஷின் நண்பர் தனுஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து சிவகுமார் மீது மோதுவது போல் வண்டியை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், உருட்டுக்கட்டையால் தனுசின் காலில் தக்கியுள்ளார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

3 பேர் கைது

சிவக்குமார் தாக்கியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனுஷை லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து தினேஷ் சிவக்குமாருக்கு போன் செய்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். பதிலுக்கு சிவக்குமாரும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், ஹரிஹரன், கார்த்திக் ஆகியோர் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து, சிவக்குமாரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசி, கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்