ரூ.20 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை எந்திரத்தை திருடிய 3 பேர் கைது
திருவண்ணாமலையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை எந்திரத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை எந்திரத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல் அறுவடை எந்திரம்
திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு அருகில் உள்ள கோடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 31). இவர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இதன் மதிப்பு ரூ.20 லட்சமாகும்.
கடந்த 3-ந் தேதி வள்ளிவாகையில் காமராஜ் என்பவரின் விவசாய நிலத்தில் அவரது அறுவடை எந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மறுநாள் காலையில் பார்த்தபோது அதனை காணவில்லை. சுற்றுப்பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ சிலர் அதனை திருடிச்சென்றதை உணர்ந்த ராஜசேகர் அது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவண்ணாமலை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பிடிபட்டனர்
இந்த நிலையில் நேற்று காலை துரிஞ்சாபுரம் பகுதியில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நெல் அறுவடை எந்திரத்தை மறித்து போலீசார் சோதனை நடத்தியதில் அந்த எந்திரம் ராஜசேகருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகில் உள்ள சிறுகிளாம்பாடியை சேர்ந்த சிவக்குமார் (வயது 22), மாதலாம்பாடியை சேர்ந்த விஜய் (26), களஸ்தாம்பாடியை சேர்ந்த விஜி (23) என்பது தெரியவந்தது.
சிவக்குமாரும், விஜியும் நெல் அறுவடை எந்திரம் இயக்கும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் இருவரும் நெல் அறுவடை எந்திரத்தை திருடியதும், விஜய் தங்களுக்கு உடந்தையாக இருந்ததையும், திருடிய நெல் அறுவடை எந்திரத்தை துரிஞ்சாபுரம் காட்டில் மறைத்து வைத்திருந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.