ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
குறைந்த விலையில் செல்போன் தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மோசடி செய்த மர்ம நபர்கள்
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இணையதளம் வழியாக மோசடி செய்யப்பட்டு பணத்தை இழந்தவர்கள் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.
அதன் பேரில் சைபர்கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், ரோஸ்சின் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி தஞ்சையை சேர்ந்த சஞ்சீவிராம் என்பவரிடம் ரூ.23 ஆயிரத்தை மர்மநபர் மோசடி செய்தாா்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்டம் கோழிபுலியூர் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர்(வயது 28) என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
வேலை வாங்கி கொடுப்பதாக...
தஞ்சையை சேர்ந்த கவுதம் என்பவரிடம் முகநூல் மூலம் பழகிய மர்ம நபர் ஒருவர், கவுதமிற்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதற்காக அவர் கவுதமிடம் பல்வேறு தவணைகளாக ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400-ஐ பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.
இதே போல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசவளநாடு தெக்கூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகிய நபர் ஒருவர் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 450-யை மோசடி செய்துள்ளார்.
நெல்லை, நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் கைது
இதுகுறித்து கவுதம் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்த டேனியல்(28) என்பவரையும், நாகர்கோவில் அருகில் உள்ள கேசவதிருப்பாபுரம் ரைஸ்மில் பகுதியை சேர்ந்த மெல்வின் ராஜ் (38) என்பவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, லேப்-டாப், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.