டாஸ்மாக் பார் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது
டாஸ்மாக் பார் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் 15-வது வார்டு அண்ணா நகரை சேர்ந்தவர் குமார். இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உப்போடையில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ந்தேதி இரவு 9.45 மணியளவில் குமார் வழக்கம்போல் பாரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு எளம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சதீஷ் (வயது 27), எளம்பலூர் 1-வது வார்டு வடக்கு தெருவை சேர்ந்த கண்ணையன் மகன் ராஜா (32), எளம்பலூர் 12-வது வார்டு செட்டியார் வீதியை சேர்ந்த ராமராஜ் மகன் மணிகண்டன் (23) ஆகிய 3 பேர் வந்து குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
அப்போது பணம் இல்லை என்று கூறிய குமாரை 3 பேரும் சேர்ந்து தாக்கினர். பின்னர் சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி, அவரது மேல் சட்டைப்பையில் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்தார். இதனை கண்டித்த குமாரை அவர்கள் 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இது தொடர்பாக குமார் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், ராஜா, மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.