சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது

மசினகுடி அருகே சீகூர் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-01-17 18:45 GMT

கூடலூர்,

மசினகுடி அருகே சீகூர் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சந்தன மரங்கள் கடத்தல்

நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியாக மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது. இதுதவிர காட்டு யானைகள், புலிகள், செந்நாய்கள், கரடிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் மசினகுடி அருகே உள்ள சீகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

3 பேர் கைது

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் பலர் அதற்கு உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெங்குமரஹாடா பகுதியை சேர்ந்த பண்டன் (வயது 32), மசினகுடி பகுதியை சேர்ந்த பாலன், சந்திரன் ஆகிய 3 பேர் மீது சீகூர் வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து பண்டன், பாலன், சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சந்தன மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. இதனால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர். மசினகுடி அருகே வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்