திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள பள்ளிப்பாறவிளை வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் பென்சாம். இவருடைய மகன் பெல்ஜின் (வயது20). இவர் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று பெல்ஜின் சாமியார்மடம் பகுதியில் உள்ள கிறிஸ்ததுவ ஆலயத்தில் இரவு பிரார்த்தனை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாமியார்மடம் பகுதியை சேர்ந்த சபரிஸ் (24), அபுதாகிர் (19), தெவ்பிக் (22), முகமது நியாஸ் (20) ஆகிய 4 பேரும் மதுபோதையில் பெல்ஜினிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் அவர்கள் பெல்ஜினை சராமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பெல்ஜினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பெல்ஜின் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் சப்-இஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து அபுதாகிர், தெவ்பிக், முகமது நியாஸ் ஆகிய 3 பேரை கைது செய்தார். இதில் அபுதாகிர், முகமது நியாஸ் ஆகிய 2 பேரும் தக்கலை அருகே உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள். தலைமறைவான சபரிஸ்சை போலீசார் தேடி வருகின்றனர்.