சூளகிரி அருகே தனியார் நிறுவன ஊழியரை குத்திக்கொன்ற 3 பேர் கைது போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
சூளகிரி அருகே தனியார் நிறுவன ஊழியரை குத்திக்கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூளகிரி:
சூளகிரி அருகே தனியார் நிறுவன ஊழியரை குத்திக்கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
குத்திக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஏனுசோனை பி.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). இவர் நல்லாரபள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பி.கொத்தப்பள்ளியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் தலை, கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு சந்தோஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
நண்பர்கள்
தற்போது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மீனாவின் அண்ணன் குமுதேப்பள்ளியை சேர்ந்த முருகேஷ் (24) என்பவரும், சந்தோசும் நண்பர்கள் ஆவர். இதற்கிடையே சந்தோஷ், மீனா காதலித்து வந்தனர். இவர்களின் காதல் முருகேஷ் வீட்டுக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி கடந்த 1 ஆண்டுக்கு முன் சந்தோஷ்- மீனா திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் முருகேஷ், நண்பர் சந்தோஷ் மீது கோபமடைந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்து கொண்டு வீடு திரும்பிய சந்தோசை, நண்பர்கள் உதவியுடன் முருகேஷ் குத்திக்கொன்றது தெரியவந்தது.
கைது
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் முருகேஷ் மற்றும் அவருடைய, நண்பர்களான குமுதேபள்ளியை சேர்ந்த குமார் (24), 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.