2-வது திருமணம் செய்த கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த சகோதரர்
2-வது திருமணம் செய்த கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (வயது 26). இவருடைய கணவர் 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பாண்டிச்செல்விக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் பாண்டிச்செல்வி, திருத்தங்கல் முத்துமாரிநகரை சேர்ந்த பால்பாண்டி என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இது பாண்டிசெல்வியின் தாய் தங்கபாண்டியம்மாள், தம்பி மாரியப்பன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பாண்டிச்செல்வி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
சம்பவத்தன்று பாண்டிச்செல்வி, அவரது கணவர் பால்பாண்டி ஆகியோர் கக்கன் காலனியில் உள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாரியப்பன், திடீரென கர்ப்பிணி பாண்டிச்செல்வியிடம் தகராறு செய்து அவரது வயிற்றில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
கீழே விழுந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட பாண்டிச்செல்வி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் மாரியப்பன், அவருடைய தாய் தங்கபாண்டியம்மாள் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.