குமரி மாவட்டத்தில்2-வது நாளாக சிவாலய ஓட்டம் கோவில்களில் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம்

குமரியில் 2-வது நாளாக நேற்று சிவாலய ஓட்டம் நடந்தது. சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கோவில்களில் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-18 21:36 GMT

நாகர்கோவில்:

குமரியில் 2-வது நாளாக நேற்று சிவாலய ஓட்டம் நடந்தது. சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கோவில்களில் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.

சிவாலய ஓட்டம்

சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓடியும், நடந்தும் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

குமரியில் சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.

12 கோவில்கள்

நேற்று முன்தினம் மாலையில் முதல் சிவாலயமான முன்சிறை மகாதேவர் கோவிலில் பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். அங்கு புனித நீராடி காவி துண்டுகள் அணிந்து கையில் பனை ஓலை விசிறியுடன் 12 கோவில்களுக்கு சிவாலய ஓட்டத்தை தொடங்கினர்.

அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெட்டுமணி, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், கோவில் என ஒவ்வொரு கோவிலாக ஓடி சென்று வழிபட்டனர்.

கோவிந்தா... கோபாலா...

ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போதும் அங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி சாமி கும்பிட்டு பிரசாதம் வாங்கிவிட்டு அடுத்த கோவிலை நோக்கி சென்றனர். இரவு முழுவதும் கோவிந்தா... கோபாலா... என்று சரணம் கோஷம் எழுப்பியபடி 12 சிவாலயங்களுக்கும் ஓட்டமும் நடையுமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் தொடங்கிய சிவாலய ஓட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. நேற்று மாலையில் 12-வது சிவாலயமான நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் ஓட்டத்தை நிறைவு செய்தனர். இதில் பக்தர்கள் சுமார் 108 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வந்தனர்.

சிவாலய ஓட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களுக்கு கோவில் வளாகங்களில் பக்தர்கள் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது. உண்ணியூர்கோணம், திருந்திக்கரை, வலியாற்றுமுகம் உள்பட பல இடங்களில் பக்தர்களுக்கு பாயாசத்துடன் சாதம், பலாகாய் அவியலுடன் கஞ்சி, மாங்காயுடன் மோர், சுக்கு நீர் போன்றவை வழங்கப்பட்டது.

வாகனங்களில்...

நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ் போன்ற வாகனங்களில் 12 சிவாலங்களுக்கும் சென்று வழிபட்டனர். திற்பரப்பு, திருநந்திக்கரை உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் பக்தர்களின் வாகனங்களால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சிவராத்திரியையொட்டி கோவில்களில் விடிய விடிய கண்விழித்து இருந்து சாமி தரிசனம் ெசய்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்கள் அனைத்தும் விழா கோலம் பூண்டிருந்தது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் 12 சிவாலயங்களிலும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு உரிய அறிவுரைகள் கூறினார்.

சிவாலய ஓட்ட பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்