பள்ளிக்கு 2-வது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு 2-வது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Update: 2022-09-15 09:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்தது பஞ்செட்டி கிராமம். இங்கு வேலம்மாள் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இதில் இயங்கி வரும் 5 பள்ளிகளில் மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பள்ளியின் துணை முதல்வர் திலக்ராஜின் செல்போனுக்கு சர்வதேச எண்ணில் இருந்து பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டல் வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு மீண்டும் அந்த பள்ளிக்கான வெடிகுண்டு மிரட்டல் குறித்த குறுஞ்செய்தி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், பொன்னேரி ஆர்.டி.ஓ. காயத்ரி ஆகியோருக்கு வந்துள்ளது.

இதனையடுத்து நேற்றும் அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் 2-வது நாளாக சென்னையில் இருந்து வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

நேற்று (புதன்) பிற்பகல் 3 மணி அளவில் குண்டு இன்று வெடிக்காது என மற்றொரு குறுஞ்செய்தி அதே சர்வதேச எண்ணில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு வதந்தியை பரப்பியது யார்? என விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே வெடிகுண்டு வதந்தி பரப்பப்பட்ட சர்வதேச எண், அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தை சேர்ந்த செல்போன் எண் என்பது தெரியவந்துள்ளது. மேலும், உள்ளூரில் இருந்து கொண்டே செயலி மூலம் கூட சர்வதேச எண்ணில் இருந்து விஷமிகள் இது போன்ற தகவல் அனுப்பி இருக்க கூடும் என சைபர் கிரைம் போலீசார் கருதுகின்றனர். பள்ளிக்கு தொடர் விடுமுறை விட வேண்டும் என்கிற நோக்கில் மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டலால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்