ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீ பற்றி எரிந்தது.

Update: 2022-07-23 20:00 GMT

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியில் நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. நேற்று முன்தினம் மாலை அங்கு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் சங்கரன்கோவில் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே பாளையங்கோட்டை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் புகை எழும்பியபடியே உள்ளது. இதனால் அதனை சுற்றி உள்ள புதுக்காலனி, பாலாஜி நகர், சிவாஜி நகர், சத்திரம் புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். வழக்கமாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை கிடங்கில் குவிக்கப்படும் குப்பைகள் மீது அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் லாரி பழுது காரணமாக தண்ணீர் ஊற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திடீரென தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்