ஆசனூர் பகுதியில் 2-வது நாளாக50 கிராமங்கள் இருளில் மூழ்கினகுடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

ஆசனூர் பகுதியில் 2-வது நாளாக 50 கிராமங்கள் இருளில் மூழ்கின

Update: 2023-07-22 21:59 GMT

ஆசனூர் பகுதியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக 2-வது நாளாக 50 கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மின்தடை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலைக்கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ஆசனூர், கேர்மாளம், திங்களூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் வீசிய சூறாவளிக்காற்றால் வனப்பகுதி வழியாக வரும் மின்கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசனூர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன்காரணமாக ஆசனூர், அரேபாளையம், குளியாட, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவள்ளம் உள்பட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டன. இதனால் மின்சாரம் இல்லாமல் விடிய விடிய மலைவாழ் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

குடிநீர் கிடைக்காமல்...

தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக மின்சார வினியோகம் செய்யப்படாததால் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் மோட்டார் இயக்க முடியவில்லை.

இதனால் மலைவாழ் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், 'வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் இதேபோன்ற நிலைமை கடந்த ஒரு ஆண்டாக நீடித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் மின்சார ஊழியர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்ய முடியாமல் மின்சார வாரியம் திணறி வருகிறது. அதுமட்டுமின்றி சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழமையானதாக இருப்பதால் அடிக்கடி அறுந்து விழுந்து மின் தடை ஏற்படுகிறது. எனவே மின் கம்பிகளை சீரமைத்து இதுபோன்று மீண்டும் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்