சிவபுரீசுவரர் கோவிலில் 29 ஆயிரம் சுருணை ஓலைகள் கண்டுபிடிப்பு

குளித்தலை அருகே உள்ள சிவாயம் சிவபுரீசுவரர் கோவிலில் இருந்து 29 ஆயிரம் சுருணை ஓலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதனை அட்டவணைப்படுத்தும் பணி மும்முரமாக நடக்கிறது.

Update: 2023-06-23 18:29 GMT

பராமரிப்பு பணிகள்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான சிவபுரீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கோபுரத்தில் இருந்து 29 ஆயிரம் சுருணை ஓலைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஓலைகளை தூய்மை செய்து ஓலையில் உள்ள தகவல்களை கண்டறியும் பணி கடந்த 2022-ம் ஆண்டு முதல் சுவடு திட்டப் பணிகள் குழு மூலம் தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.தற்ேபாது அதனை அட்டவணைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இம்மாதத்திற்குள் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

வரலாற்று செய்திகள்

இதுகுறித்து இச்சுவடித்திட்டப் பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன் கூறியதாவது:-

சிவாயம் சிவபுரீசுவரர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுருணை ஓலைகள் நீண்டகாலமாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததால் முதலில் அவற்றைப் பராமரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கிடைத்துள்ள சுருணை ஓலைகள் ஏடுகளில் சிவாயம் கோவில் சார்ந்த பல்வேறு வரலாற்று செய்திகள் காணப்படுகின்றன.

சுருணை ஓலை என்பது இலக்கிய ஏடுகளின் அளவில் இருந்து மாறுபட்டது ஆகும். சுருணை ஏட்டின்அளவு சுமார் 100 செ.மீ. நீளம் வரை காணப்படுகின்றது. இவற்றில் சொத்து விவரம், கோவில் வரவு செலவு கணக்கு விவரம், நில குத்தகை முறைகள், கோவில் அலுவல் குறிப்புகள், நில தானங்கள், பூசை முறைகள், பண்டாரக் குறிப்புகள், வரலாற்றுச் செய்திகள் போன்ற பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.

தேவதாசிகளுக்கான நிலதானமும் பரிவட்டமும்...

சிவபுரீஸ்வரர் ேகாவிலில் முன்பு தேவதாசிகள் இருந்துள்ளனர். இவர்கள் இறைவனுக்கு திருப்பணி செய்து வந்துள்ளனர். கோவிலில் கச்சி, மருது, பாப்பா, குட்டி, ராமி, கருப்பி, சின்னி, கொழுந்தி, மீனாட்சி, காமாட்சி, முறைச்சி, கச்சி போன்ற தேவதாசிகள் பலர் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. இத்தேவதாசிகளுக்கு திருக்கோவிலுக்கு சொந்தமான 3 காணி நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேவதாசிகள் நடனம் ஆடுகின்றபோது மேளம் அடிக்க தனியாக மேளக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அதோடு, தேவதாசிகளுக்கு கோவிலில் பரிவட்டம் கட்டும் வழக்கமும் இருந்துள்ளது.

கோவில் வரவு செலவு குறிப்புகள்

சிவபுரீஸ்வரர் திருக்கோவிலில் அன்றாடம் நடைபெற்ற பூஜைகளுக்குச் சிவாய தேவஸ்தானம் கருவூலத்தில் இருந்து செலவுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு சொந்தமான தென்னந்தோப்பு, புளியந்தோப்பு, குளத்தங்கரை தோப்பு ஆகியவை ஏலம் முறையில் குத்தகை விடப்பட்டுள்ளது. இவ்வாறு குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களில் இருந்து கிடைக்கபெற்ற நெல், கம்பு, எள், துவரை, சோளம், வரகு, ஆமணக்கு, சாமை, பயிர் வகைகள் போன்றவற்றைக் குத்தகை வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. மேலும், குத்தகைப் பணங்களைச் சரியாகச் செலுத்தாத நபர்களுக்கு இருமடங்கு வரி விதிக்கப்பட்டதோடு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கில சர்க்காரின் உத்தரவுகள்

கி.பி. 1846 காலகட்டங்களில் சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவில் கும்பினியார் (ஆங்கிலேயர்கள்) சர்க்காருக்குக்கீழ் இயங்கி வந்துள்ளது. அப்போது, சிவாயம் தேவஸ்தான கிராம முனிசிப்பாக முத்துவீரன்செட்டி என்பவர் இருந்துள்ளார். அவரின் மேற்பார்வையிலுள்ள கிராமங்களில் கைபிடிச்சுவர் இல்லாத கிணறுகளுக்குச் சுவர் அமைக்க சர்க்கார் தரப்பில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு உட்பட்ட புஞ்சை நிலங்களில் சாகுபடியான பொருள்களை வசூல் செய்வதற்கும் சர்க்கார் உத்தரவு அனுப்பியுள்ளது. அதோடு சிவாயம் தேவஸ்தானம் சார்ந்த தெரு மற்றும் சரகத்திற்கு மின்கம்பம் அமைக்கவும் சர்க்கார் தரப்பிலிருந்து உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

சிவாய தேவஸ்தானமும் நீதி விசாரணைகளும்

கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிவாயம் சிவபுரீசுவரர் கோவில், அய்யர்மலை ெரத்தினகிரீசுவரர் கோவில் தேவஸ்தானத்துடன் இணைந்து இருந்துள்ளது. அய்யர்மலைக்கோயிலை சிவாயம் மலைக்கோவில் என்றே அழைத்து வந்துள்ளனர் மேலும், இதே காலகட்டத்தில் சிவாயம் கோவில் தேவஸ்தானம் ஒரு நீதி மன்றம்போல் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு பல்வேறு வழக்குகள் சர்க்கார் சார்பில் விசாரிக்கப்பட்டுள்ளன. சிவாயம் தேவஸ்தானத்தில் ஸ்தானிகராகப் பணிபுரிந்த வீரபத்திரன் பிள்ளை என்பவர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பற்றி வேவஸ்தானம் விசாரணை நடத்தியுள்ளது.

அதுபோல, அப்புவய்யன் என்ற பணியாளர் குளித்தலை பெருமாள் கோவில், கடம்பர் கோவில், ஈஸ்வரன் கோவில், ராஜேந்திரம் கோவில், கிருஷ்ணராயபுரம் கோவில், மகாதானபுரம் கோவில், சேரகல் கோவில், சூரியனூர் கோவில், ஆண்டார் திருமலைக்கோவில் ஆகிய கோவில்களில் பணி செய்துள்ளாரா? என்று விசாரித்து பணிபுரிந்திருந்தால் அவருக்கு 3 மாதம் சம்பளம் வழங்குவது குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சுருணை ஓலைகளில் காணப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்