ஓமலூர் அருகே தனியார் பள்ளியில் பப்ஸ் சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு கேண்டீனை மூட தாசில்தார் உத்தரவு
ஓமலூர் அருகே தனியார் பள்ளியில் பப்ஸ் சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கூட கேண்டீனை மூட தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
ஓமலூர்,
தனியார் பள்ளிக்கூடம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தின்பண்டங்கள் விற்பனை செய்ய கேண்டீன் உள்ளது.
நேற்று காலை 11 மணி அளவில் வகுப்பு இடைவெளியின் போது 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கேண்டீனில் முட்டை பப்ஸ் மற்றும் வெஜ் பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அதனை சாப்பிட்டதாக தெரிகிறது.
மாணவர்களுக்கு வாந்தி
சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக 29 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். இதனால் பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், கேண்டீன் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பள்ளி வாகனங்கள் மூலம் மாணவர்களை மீட்டு ஆர்.சி. செட்டிபட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் திரண்டனர். பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரியிலும் குவிந்தனர். கேண்டீன் ஊழியர்களிடமும், பெற்றோர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
கேண்டீனை மூட உத்தரவு
தகவல் அறிந்த ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் மாணவர்கள் சாப்பிட்ட பப்ஸ் உள்ளிட்டவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி அரவிந்த் பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பப்ஸ் வாங்கப்பட்டதாக கூறப்பட்ட பேக்கரியில் தாசில்தார் வல்ல முனியப்பன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தில் கேண்டீன் தேவையில்லை என்று பெற்றோர்கள் கூறினர். இதைதொடர்ந்து கேண்டீனை மூட தாசில்தார் வல்ல முனியப்பன் உத்தரவிட்டார்.