3-ம் மண்டல பாசனத்திற்கு 28-ந்தேதி தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு 28-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகளுடன் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2022-12-19 18:45 GMT

பொள்ளாச்சி

திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு 28-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகளுடன் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் 2-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 28-ந்தேதி முதல் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

முன்னாள் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், பகிர்மான குழு தலைவர்கள் அருண், ஜெயபால், நல்லதம்பி மற்றும் பாசன சபை தலைவர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து பி.ஏ.பி. விவசாயிகள் கூறியதாவது:-

7,600 மில்லியன் கன அடி

3-ம் மண்டலத்தில் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்கு வருகிற 28-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், 4 சுற்றுக்கள் வீதம் 7,600 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளால் அரசுக்கு கருத்துரு அனுப்பி தண்ணீர் திறக்க அரசாணை பெறப்படும்.

தற்போது 3-ம் மண்டலத்தில் பாசனம் பெறும் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை தண்ணீர் திறப்பிற்கு முன் முடிக்க வேண்டும். மேலும் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை பெற வேண்டும். கால்வாய்களை சீரமைத்தால்தான் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்று வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்