படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அடுத்த மாதம் 28-ந் தேதி கடைசிநாள்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-19 18:45 GMT

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.1.2023 முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அதாவது 10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 1.1.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்சி. நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 1.1.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் இலவசம்

எனவே உதவித்தொகை பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் கடலூா் மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்