ரூ.2,819 கோடியில் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கென ரூ.2 ஆயிரத்து 819 கோடியில் குடிநீர் கொண்டு வரும் தனி திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

Update: 2023-08-29 18:45 GMT


ராமநாதபுரம் மாவட்டத்திற்கென ரூ.2 ஆயிரத்து 819 கோடியில் குடிநீர் கொண்டு வரும் தனி திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

குடிநீர் குழாய்கள்

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த தி.மு.க. ஆட்சியின்போது திருச்சி காவிரி ஆற்றிலிருந்து ராமநாதபுரம் பகுதிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டது. இந்த குடிநீர் திட்ட இணைப்பு குழாய்கள் பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்து முழுமையாக தண்ணீர் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 7 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது 5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேவையான போதிய தண்ணீர் கிடைக்காததை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடிநீர் இணைப்பு குழாய்களை சீரமைக்க ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்து மறு சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன்மூலம் தண்ணீர் சீராக வந்து சேரும். இருப்பினும் தேவைப்படும் தண்ணீர் அளவை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தனித்திட்டமாக கரூர் மாவட்டம், நஞ்சை புகழூரிலிருந்து காவிரி குடிநீர் கொண்டு வரும் திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரூ.2 ஆயிரத்து 819 கோடி செலவில் ஜல் ஜீவன் திட்டத்தில் தனி குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை எடுத்து அரவக்குறிச்சியில் சுத்திகரித்து மேலூர் கணபதிபுரத்தில் இருந்து மேல்நிலைத்தொட்டி மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேரடியாக தண்ணீர் கொண்டுவரப்படும்.. வரும் வழியில் இதற்காக 804 மேல்நிலைத்தொட்டிகள் கட்டப்பட உள்ளன. மேலும் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதிகளுக்கு தனிக்குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

பணிகள் தீவிரம்

மானாமதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல்ஜீவன் திட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய 2 நகராட்சிகள், அபிராமம், கமுதி தவிர பிற 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 2 ஆயிரத்து 306 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.2819.78 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்ததிட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பணிகளை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் விரைந்து முடித்து குடிநீர் சப்ளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்