ரூ.28.15 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
நெல்லை பேட்டையில் ரூ.28.15 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
பேட்டை:
நெல்லை பழையபேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 67 பேருக்கு ரூ.28.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கர், நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.