வங்கிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாட்டுக்காக வங்கிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-02 18:45 GMT

விழுப்புரம் ராகவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சவரி. வக்கீலான இவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பானாம்பட்டு கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் ஒரு வழக்கு தொடர்பாக 21.10.2016 அன்று செஞ்சி நீதிமன்றத்திற்கு அவசரமாக புறப்பட்டு செல்லும் நேரத்தில் செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும், உங்களுக்கு புதியதாக ஏ.டி.எம். அட்டை தர வேண்டும் என்றும் உங்களுடைய ஏ.டி.எம். கார்டு நம்பரை சொல்லுங்கள் எனக்கூறியுள்ளார். இதை நம்பிய சவரி, 14 இலக்க எண்ணை குறுந்தகவலாக அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் சவரி, பானாம்பட்டு வங்கி கிளைக்கு சென்று அங்கிருந்த மேலாளரிடம் தனது சேமிப்பு இருப்பை பார்க்க சொன்னார். அப்போது அவரது கணக்கில் இருந்து 15 முறை யாரோ, சிறிது சிறிதாக ரூ.35 ஆயிரத்து 645-ஐ திருட்டுத்தனமாக எடுத்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து சவரி, வங்கி மேலாளர் மற்றும் போலீசாரிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் அவர், வளவனூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சுப்பிரமணியன் மூலம் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.

சேவை குறைபாடு

அந்த தீர்ப்பில், புகார்தாரர் சவரிக்கு ரூ.35,645-ம் மற்றும் அனுமதியில்லாமல் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துள்ளதால் 21.10.2016 முதல் பணம் தரும் வரை 12 சதவீத வட்டியுடனும், சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்காக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரமும் தீர்ப்பு தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கி அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்