28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 கடைகள் மூடல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமம் இன்றி செயல்பட்ட 3 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டது.

Update: 2022-06-23 18:42 GMT


ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமம் இன்றி செயல்பட்ட 3 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டது.

அதிரடி சோதனை

தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த வாரம் போலீசார் நடத்திய சோதனையில் 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக உணவுப்பாதுகாப்புத்துறையினர் மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் நடத்திய சோதனையில் இதுவரை 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 55 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் சாயல்குடி பகுதிகளில் உரிமம் இன்றி கடைகள் வைத்து நடத்தி வந்ததுடன் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் தற்காலிகமாக கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த கடைகள் உரிய அனுமதி பெற்றபின்னர்தான் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் உரிய அறிவிப்பு முத்திரை இல்லாத தின்பண்ட பாக்கெட்டுகள் கைப்பற்றி அழிக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட கடைகளில் இதுபோன்ற தின்பண்ட பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

இதுதவிர கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 8 கடைகளில் எண்ணெய் பலகாரங்கள் சுடுவதற்கு ஒரே எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது தெரியவந்ததை தொடர்ந்து அந்த எண்ணெய் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று எண்ணையை பலமுறை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்து எழுதி வாங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் இந்த சோதனை நடைபெறும் என்று உணவுப்பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்