28 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

கோவையில் சைக்கிள் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-25 19:30 GMT

கோவை

கோவையில் சைக்கிள் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரகசிய தகவல்

தமிழக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை டி.ஜி.பி. வன்னிய பெருமாள் அரசு பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்படி பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், பறக்கும் படை தாசில்தார் முத்துமாணிக்கம் மற்றும் போலீசார் கோவை-குனியமுத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு சைக்கிள் கடையில் ஏராளமான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

பறிமுதல்

இதையடுத்து போலீசார் அங்குள்ள அம்மன் கோவில் தெருவில் உள்ள சைக்கிள் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த 20 வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் 8 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 28 கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக குனியமுத்தூர் பிருந்தாவன் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பொதுமக்களிடம் இந்த கியாஸ் சிலிண்டரை குறைந்த விலைக்கு வாங்கி டீ கடை மற்றும் வட மாநில நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்