பள்ளி வேன் கவிழ்ந்து 27 மாணவ-மாணவிகள் காயம்

மாத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 27 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-05 18:50 GMT

பள்ளி வேன் கவிழ்ந்தது

திருச்சி மாவட்டம், துப்பாக்கி தொழிற்சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி மற்றும் தனியார் வேன்கள் மூலம் வந்து செல்கின்றனர். அதன்படி திருச்சி மன்னார்புரத்திலிருந்து நேற்று காலை 8 மணியளவில் புறப்பட்ட தனியார் வேன் ஒன்று கே.கே.நகர், உடையான்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டி, குமாரமங்கலம், மாத்தூர் வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் 34 பேரை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.

திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த பக்ருதீன் (வயது 40) என்பவர் வேனை ஓட்டிச்சென்றார். அந்த வேன் காலை 8.30 மணியளவில் மாத்தூர் அருகே குமாரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவ-மாணவிகள் அய்யோ, அம்மா என்று அலறினர்.

27 மாணவ-மாணவிகள் காயம்

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேனின் பின்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் காயமடைந்த மாணவ- மாணவிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் மானசவர்த்தினி (வயது 13), நித்தியபிரியா (10), நந்தினி (13), தேட்சாணிபிரியா (14), தீபஸ்ரீ (12), லிங்கேஸ் (14), ஜோத்தும் (13), ஜஸ்வின்ஸ்ரீ (8), அருண்குமார் (9), மாதவன் (10), கிரிசாந்த் (14), ஜெயந்தி ஸ்ரீ (16), வைஷ்ணவி (16), பிரியங்கா (14), கிருத்திக்ரோஷன் (7), பூர்ணிமா (9), ஆதித்யா (11), அர்ஜுன் (11), கவுசல்யா (7), அதிதி (10), ஹரி (16), தியா (11), பஞ்சதீஸ்வரன் (12), அபிராமி (13), தேவிகா (11), பூஜா ஸ்ரீ (11) ஆகிய 27 மாணவ- மாணவிகளுக்கு கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் காயமின்றி தப்பிய மாணவர்களை வேறு வாகனத்தின் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். அதேபோல் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனால் குமாரமங்கலம் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்