சரக்கு ரெயிலில் 2,619 டன் யூரியா உரம் திருவண்ணாமலைக்கு வந்தது
காக்கிநாடாவில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரெயிலில் 2,619 டன் யூரியா உரம் வந்தது.
காக்கிநாடாவில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரெயிலில் 2,619 டன் யூரியா உரம் வந்தது.
யூரியா உரம்
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்த திருவண்ணாமலைக்கு சரக்கு ரெயில் மூலம் 2,619 டன் இப்கோ யூரியா உரம் வந்தது. இதில் 2 ஆயிரம் டன் யூரியா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மீதமுள்ள 619 டன் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.
யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நடப்பு மாதத்திற்கு இதுநாள் வரை 4 ஆயிரத்து 78 டன் இப்கோ மற்றும் எம்.எல்.எல். யூரியா, 802 டன் பேக்ட், காம்ப்ளக்ஸ் உரங்கள் பெறப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது வரை 4,709 டன் யூரியா, 2,139 டன் டி.ஏ.பி., 871 டன் பொட்டாஷ், 386 டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 6,466 டன் காம்பளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்
விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின் படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று வாங்கி பயன்பெறலாம். மேலும் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் விற்பனை முனைய கருவி வாயிலாக விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்திடவும் மற்றும் விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்கள் இல்லாத உரங்கள் வழங்கிடவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் உர விற்பனை நிலையங்களில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 மீறிய செயல்கள் கண்டறிந்தால் உரிய உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.